Last Updated:
ஹரியானா மாநிலத்தில் கார்களில் சாகச பயணம் மேற்கொண்டு ரீல்ஸ் எடுத்து எல்லைமீறிய ஜோடிகளை போலீசார் தேடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தைச் சர்ச்சையோடு தொடங்கிய கும்பலுக்கு போலீசார் புகட்டிய பாடம் என்ன?
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள சாலையில் 10க்கும் மேற்பட்ட கார்களில் கும்பலாகக் கிளம்பிய ஜோடிகள், கார் கண்ணாடிகளைத் திறந்து உடலை வெளியே நீட்டிக்கொண்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர், கார் ரூஃப் டாப்பை ஓபன் செய்து மேலே ஏறி நின்று கொண்டாட்ட போதையில் மிதந்தனர். ஜோடி ஜோடியாக இவர்கள் செய்த அட்டூழியத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். லாரி, ட்ரக் போன்ற வாகனங்கள் உரசினால் என்னவாகும்? அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் ஏன் இப்படியொரு விபரீத செயல்? ஓடும் காரில் உயிரைப் பயணம் வைத்தது ஏன்?
எல்லாம் ரீல்ஸ் வீடியோவுக்காகத்தான். புத்தாண்டு கொண்டாட்டத்தில் காரில் சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுக்க முன்கூட்டியே பிராக்டீஸ் செய்த ஜோடிகளின் முன்னோட்ட வீடியோதான் இது.
கார்களின் பதிவு எண்கள் வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை; அதனால் சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்தும் விசாரித்து வருகின்றனர். அபராதம் விதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு காவல் நிலைய விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அதில் தலைமறைவான மேலும் சிலரையும் தேடி வருகின்றனர். சிக்கும் அனைவருக்கும் இந்த வருடம் காவல் நிலையத்தில்தான் புத்தாண்டு கொண்டாட்டம்!


