டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழை காரணமாக கடுமையான டர்புலன்ஸை எதிர்கொண்டது. அதைத் தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த விமானி அனுமதி கோரினார், ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர், விமானம் பாதுகாப்பாக தரையிறப்பட்டது மற்றும் அதில் பயணம் செய்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை தலைநகர் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ விமானத்தின் குழுவினர் டர்புலன்ஸைத் தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளியில் நுழைய அனுமதி கோரியதாகவும், ஆனால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையில், விமானத்தில் இருந்த பயணிகளுக்கும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விமானத்தின் முன்புறத்தில் நீண்டிருக்கும் மூக்கு போன்ற அமைப்பான “நோஸ் ரேடோம்” சேதமடைந்துள்ளதாகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது விமானம் எதிர்கொண்ட டர்புலன்ஸ் குறித்து டிஜிசிஏ விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த புதன்கிழமை, இண்டிகோவின் A321 நியோ விமானமான 6E 2142, பதான்கோட் அருகே ஆலங்கட்டி மழை மற்றும் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தது. “குழுவினரின் அறிக்கைப் படி, பாதையில் மோசமான வானிலை காரணமாக இடது (சர்வதேச எல்லை) நோக்கி திருப்புவதற்காக அவர்கள் வடக்கு கட்டுப்பாட்டை (IAF) மையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர், ஆனால், அவர்களது கோரிக்கை அங்கீகரிக்கப்படவில்லை.
“பின்னர் மோசமான வானிலையைத் தவிர்க்க, பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைய லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை குழுவினர் தொடர்பு கொண்டனர், ஆனால் அதுவும் மறுக்கப்பட்டது” என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு மைய அதிகாரியின் கூற்றுப்படி, இன்டிகோ விமான குழுவினர் ஆரம்பத்தில் திரும்பிச் செல்ல முயன்றனர், ஆனால் அவர்கள் இடியுடன் கூடிய மழை மேகத்திற்கு அருகில் இருந்ததால், வானிலைக்குள் ஊடுருவிச் செல்ல பின்னர் முடிவு செய்தனர்.
“அதனாலேயே, அவர்கள் ஆலங்கட்டி மழை மற்றும் கடுமையான டர்புலன்ஸை எதிர்கொண்டனர். ஸ்ரீநகரை நோக்கி குறுகிய பாதையில் மோசமான வானிலையிலிருந்து வெளியேற அதே திசையில் தொடரவும் அவர்கள் முடிவு செய்தனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பிடிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டர்புலன்ஸைத் தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்த நிலையில், அவரது கோரிக்கையை லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நிராகரித்ததாக தெரிவித்துள்ளது.

