Last Updated:
இண்டிகோ விமான சேவை முடக்கம், மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் விதிகளில் தளர்வை அறிவித்துள்ளது.
விமானிகளின் பணி நேரம் தொடர்பான விதிகளை, மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் திரும்பப் பெற்றுள்ளது.
விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், வாரத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கட்டாய விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனால், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் இண்டிகோ விமானங்களின் சேவை நாடு முழுவதும் முடங்கியது.
இந்நிலையில், விமான சேவைகளின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை புதிய விதிகளை அமல்படுத்த தளர்வு அளித்துள்ள மத்திய அரசு, இதுதொடர்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்தியாவில் விமான சேவைகள் ஓரிரு நாளில் சீரடையும் என்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்குப் பதில் முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ரத்தான விமானங்களுக்குப் பதில் வேறு நாட்களில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படும் எனவும், பயணிகள் டிசம்பர் 15ஆம் தேதி வரை தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
December 05, 2025 6:52 PM IST


