கோலாலம்பூர்:
இணையம் வழியாக நடக்கும் மோசடி மற்றும் ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 837 மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
இத்தகவல் இணைய வழி குற்றச்செயல்கள் தொடர்பானவர்களை மட்டும் உள்ளடக்கியது எனவும், வெளிநாடுகளில் இடம்பெறும் மற்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட மலேசியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“நவம்பர் 8-ஆம் தேதியளவில் இணைய மோசடி குற்றச்சாட்டுகளுக்காக 837 மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது வெறும் ஒரு வகை குற்றம் மட்டுமே. இன்னும் பல ஆயிரக்கணக்கான மலேசியர்கள் பிற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது மிகுந்த கவலையளிக்கிறது,” என்று இன்று திங்கள்கிழமை (நவம்பர் 10) மக்களவையில் கூறினார்.
இவர்களில் அதில் 765 பேர் சீன இனத்தவர், 34 பேர் மலாய் இனத்தவர், 33 பேர் இந்திய இனத்தவர், மற்ற ஐந்து பேர் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய அவர், இதில் அதிகபட்சமாக சீனாவில் 545 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 505 ஆண்களும் 40 பெண்களும் அடங்குவர். அடுத்தபடியாக சிங்கப்பூரில் 162 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் — அவர்களில் 148 பேர் பெண்களும் 14 பேர் ஆண்களும் எனவும் அவர் கூறினார்.
மற்றவர்கள் ஜப்பான், தென்கொரியா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது “வெளிநாடுகளில் மலேசியாவின் மதிப்பை குலைக்கும் நிலை” என்றும், “இத்தனை பேர் வெளிநாடுகளில் சட்ட மீறலுக்காக தடுத்து வைக்கப்படுவது, உலக மேடையில் மலேசியாவின் பெயருக்கும் நம்பகத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்,” என்று வெளியுறவுதுறை அமைச்சர் எச்சரித்தார்.




