இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 60 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 135 செல்போன்கள், 57 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு புறநகர்ப் பகுதிகளான மடிவெல, பத்தரமுல்லை, மேற்கு கடலோர நகரமான நீர்கொழும்பு ஆகிய இடங்களிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா கூற்றுப்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த பகுதிகளில் ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில் 135 செல்போன்கள், 57 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டன.
சமூக ஊடக தொடர்புகளுக்கு பணம் தருவதாக வாட்ஸ்அப் குழுவில் விளம்பரப்படுத்தப்பட்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் சிறிதளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்களிடம் பணம் டெபாசிட் செய்ய வற்புறுத்தப்பட்ட ஒரு திட்டம் தெரியவந்தது.
பெர்டெனியாவில், தந்தை, மகன் ஆகிய இருவர் மோசடியாளர்களுக்கு உதவியதாக ஒப்புக்கொண்டதாக ‘டெய்லி மிரர் லங்கா’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நீர்கொழும்புவில் ஒரு சொகுசு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள் மூலம் 13 சந்தேக நபர்களை ஆரம்பத்தில் போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மேலும் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாய், ஆப்கானிஸ்தானில் உள்ள சர்வதேச தொடர்புகளும் இதில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் நிதி மோசடி, சட்டவிரோத பந்தயம், பல்வேறு சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.


