Last Updated:
ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் வீழ்ந்ததால், மெல்போர்ன் மைதானத்தின் பிட்ச் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன
ஆஷஸ் கிரிக்கெட் தொடரானது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட தொடராக ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியின் முதல் நாளில் அதாவது நேற்று மொத்தம் 20 விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில், போட்டியின் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் வீழ்வது ஜனவரி 1902-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். அதாவது 123 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அபூர்வ நிகழ்வு நடந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் பவுலர் ஜோஷ் டங் 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கே சுருண்டது. ஆஸ்திரேலியாவின் மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்து, ஒட்டுமொத்தமாக 46 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இந்தப் போட்டியை நேரில் காண 94,199 ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாளில் மைதானத்திற்கு வந்த அதிகப்படியான ரசிகர்களின் எண்ணிக்கை என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது இருந்த சாதனையை இது முறியடித்துள்ளது. ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் வீழ்ந்ததால், மெல்போர்ன் மைதானத்தின் பிட்ச் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேட்ச்சை பொருத்தளவில் 2 ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 176 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, 2 ஆவது நாளிலேயே வெற்றியை ருசித்தது. 2 நாட்களில் போட்டி முடிந்துள்ளதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது


