Last Updated:
இந்திய அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்ஸ்மேன் கருண் நாயருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்ததும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூன் 20 ஆம் தேதியும், இரண்டாவது போட்டி ஜூலை 2-ஆம் தேதியும், மூன்றாவது போட்டி ஜூலை 10ஆம் தேதியும், நான்காவது போட்டி ஜூலை 23ஆம் தேதியும், ஐந்தாவது போட்டி ஜூலை 31ஆம் தேதியும் ஆரம்பம் ஆகின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார். அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே. எல். ராகுல், சாய் சுதர்சன், ஈஸ்வரன் கருண் நாயர், நிதிஷ்குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக சிறப்பான ஆட்டத்தை உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் பஞ்சாப் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதற்கு என்ன காரணம் என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது இந்திய அணி தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது- ”ஒரு நாள் மற்றும் உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கான பிட்னஸ் அவரிடம் குறைவாக உள்ளது. எனவே அவருக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் கமென்ட் செய்துள்ள நெட்டிசன்கள், ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே இந்திய அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்ஸ்மேன் கருண் நாயருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்பு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.


