Last Updated:
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தில் பிறக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அந்த அணியில் விளையாடும் வீரர்களில் 5 பேர் இங்கிலாந்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் கிடையாது என்பது பலரும் அறியாத தகவலாக இருக்கிறது. அவர்கள் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சுழற்பந்துவீச்சாளர் சோயப் பஷீர் இங்கிலாந்தில் பிறந்தவர். ஆனால், அவர் பெற்றோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். சோயப் பஷீருடைய பூர்வீகம் பாகிஸ்தான் ஆகும். மேலும், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மேற்கிந்தியத் தீவுகளின் பார்படோஸில் பிறந்தார்.
அந்த அணியின் 19 வயதுக்குட்பட்ட அணியிலும் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டிலிருந்து அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தில் பிறக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். அவர் நியூசிலாந்தின் கிறிஸ் சர்ச்சில் பிறந்தார். அந்த வகையில் இங்கிலாந்து அணி கேப்டனே ஒரு வெளிநாட்டு வீரராக கருதப்படுகிறார்.
மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரைடன் கார்ஸ் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் பிறந்தார். தற்போது அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
இதேபோன்று நட்சத்திர ஆல்–ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் வெளிநாட்டில் பிறந்தவர். அவர் பார்படோஸின் பிரிட்ஜ் டவுனில் தனது சிறுவயது வாழ்க்கையை கழித்த நிலையில், தற்போது அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடுகிறார். இவ்வாறு இங்கிலாந்து அணியில் விளையாடும் ஐந்து பேரும் அந்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வைத்து வருகிறது. இதனால் அடுத்து வரும் 2போட்டிகள் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
July 16, 2025 10:03 PM IST


