இந்தூர்: ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் தோற்கடித்து இருந்தது. ஆனால் அடுத்த 2 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தலா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட இந்திய அணிக்கு 3 ஆட்டங்களே எஞ்சி உள்ளன. இதில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடி உடன் இந்திய மகளிர் அணி உள்ளது.
இந்திய மகளிர் அணி நடப்பு தொடரில் 5 பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வருகிறது. இதில் 3 பேர் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். கடைசியாக விளையாடிய இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்ததற்கு இந்த யுக்தியே காரணமாக அமைந்தது. இந்த இரு ஆட்டங்களிலும் 6-வது பந்து வீச்சாளர் இல்லாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினைக்கு இன்றைய ஆட்டத்தில் தீர்வு காண இந்திய அணி முயற்சிக்கக்கூடும்.
இங்கிலாந்து அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்யும்.