Last Updated:
ஆஸ்திரேலியா சிட்னி போண்டி கடற்கரையில் ஹனுக்கா நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 11 பேர் உயிரிழப்பு, துணிச்சலாக துப்பாக்கியை பிடுங்கிய நபர் வீடியோ வைரலாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் யூதர்கள் நடத்திய நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் 2 பேர் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய ஒருவரின் துப்பாக்கியை அங்கிருந்த நபர் துணிச்சலாக பிடிங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் துப்பாக்கியை பிடுங்கவில்லை என்றால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கும்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல போண்டி கடற்கரை பகுதியில்தான் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. யூதர்களின் முக்கிய பண்டிகையான ஹனுக்காவின் முதல் இரவை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றபோது துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்துள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் துப்பாக்கியால் ஒருவர் பொதுமக்களை நோக்கி சுட்டு கொண்டு இருக்கிறார். அப்போது ஒரு நபர் காருக்கு பின் மறைந்து சரியான சந்தர்ப்பத்தில் நேருக்கு நேர் எதிர்த்து அந்த நபரிடம் துப்பாக்கியை பிடிங்கி விடுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அவர் அங்கிருந்து ஓடுகிறார். இந்த வீடியோ அருகில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. தன் உயிரை பணயம் வைத்து பலரது உயிரை காப்பாற்றிய துணிச்சலான அந்த நபருக்கு பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று மாலை நேரத்தில் நடந்திருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்னொருவரை போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
December 14, 2025 9:16 PM IST
ஆஸ்திரேலிய துப்பாக்கி சூடு… துணிச்சலாக எதிர்த்து நின்று துப்பாக்கியை பிடுங்கிய நபர் – வைரல் வீடியோ


