[ad_1]
மெல்போர்ன்,ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மலையாளிகள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் சார்பில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்க வருமாறு பிரபல கேரள நடிகை நவ்யா நாயருக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அவரும் மகிழ்ச்சியுடன் சென்று பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- நான் ஆஸ்திரேலியா புறப்பட்டபோது எனது தந்தை எனக்கு மல்லிகைப்பூ வாங்கிக் கொடுத்தார். அதை நான் 2 துண்டுகளாக வெட்டி ஒன்றை தலையில் வைத்துக்கொண்டேன். மற்றொன்றை கைப்பையில் வைத்திருந்தேன்.
கொச்சியில் புறப்பட்ட விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியதும் தலையில் வாடிய நிலையில் இருந்த மல்லிக்கைப்பூவை எடுத்துவிட்டு, கைப்பையில் இருந்த மீதி பூவை தலையில் வைத்துக்கொண்டேன். சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றதும், விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையின்போது, என் தலையில் இருந்த பூவை கவனித்துவிட்டனர்.
அங்கு மல்லிகைப்பூவுக்கு தடை என எனக்கு தெரியாது. ஆனால், 15 செ.மீ. பூவுக்காக எனக்கு 1980 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.14 லட்சம்) அபராதம் விதித்தனர். அதனை 28 நாட்களுக்குள் செலுத்துமாறும் உத்தரவிட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பூவுடன் நான் வந்துள்ளேன். இவ்வாறு அவர் கலகலப்பாக கூறினார்.
ஆஸ்திரேலியாவிலல் கடுமையான உயிர் பாதுகாப்பு விதிகள் நடைமுறையில் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் நுண்ணுயிரிகளால் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
அந்த சோதனையில் மல்லிகைப்பூவும் அடங்கும். அந்நாட்டு வேளாண்மை துறை, மல்லிகைப்பூ மூலம் உயிர் பாதுகாப்பு அபாயம் இருப்பதாக கருதுகிறது. அதனால்தான் மல்லிகைப்பூவுக்கும் அங்கு தடை உள்ளது. அது தெரியாமல் நடிகை நவ்யா நாயர் மல்லிகைப்பூவை தலையில் வைத்து சென்றதால், அபராத விதிப்பு நடவடிக்கையில் சிக்கிக்கொண்டார்.