கான்பெர்ரா: ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் கிரிக்கெட் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2 அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்கவுள்ளது.
இதனிடையே பிரதமர் லெவன் அணியுடனான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடியது. இந்த ஆட்டம் நேற்று முன்தினம் கான்பெர்ரா மனுகா ஓவல் மைதானத்தில் தொடங்கியது. ஆனால் மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தை 50 ஓவர் கொண்ட போட்டியாக நடத்த 2 அணிகளும் ஒப்புக்கொண்டன. மழையின் காரணமாக 46 ஓவர் கொண்ட போட்டியாக இது மாற்றப்பட்டது. அதன்படி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பிரதமர் லெவன் அணி 43.2 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 46 ஓவர்களில் 257 ரன்கள் குவித்தது. இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45, நித்திஷ் ரெட்டி 42, ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள் எடுத்தனர். கே.எல்.ராகுல்27, ஷுப்மன் கில் 50 ரன்கள் சேர்த்து `ரிட்டயர்ட் ஹர்ட்’ முறையில் வெளியேறினர்.
இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 42 ரன்களும், தேவ்தத் படிக்கல் 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அபாரமாக ஆடி சதமடித்த சாம் கோன்ஸ்டாஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.