இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடரை 2012 – 13-க்குப் பிறகு ஆடவே இல்லை. இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே சந்திக்கின்றன. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்திய பாகிஸ்தான் அணிகள் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர். பாகிஸ்தான் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகின்றது. பெர்த்தில் முதல் டெஸ்ட் நடைபெறுகிறது.
இந்நிலையில் இரு அணிகளும் அங்கு இருப்பதால் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மற்றும் விக்டோரிய அரசு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை சுமார் 1 லட்சம் பேர் பார்த்ததையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் தொடரையும் நடத்த ஆர்வம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் நிக் ஹாக்லி கூறும்போது, “மெல்போர்னில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியைப் பார்த்தவர்கள் அனைவரும் அந்தப் போட்டியை ஒரு நினைவுகொள்ளக் கூடிய போட்டியாக மறக்க முடியாத தருண்மாகவே கருதுகின்றனர். வெறும் விளையாட்டு மட்டுமல்ல அது. எனவே மக்கள் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளைப் பார்க்க விரும்புகின்றனர். எனவே, வாய்ப்புக் கொடுத்தால் நிச்சயம் போட்டிகளை நாங்கள் நடத்தத் தயார். அப்படி நடத்துவதை மிகவும் நேசிக்கின்றோம். இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை நடத்துவதில் உற்சாகமாக இருக்கிறோம். இதற்கு எங்களால் உதவ முடிந்தால் அது பெரிய விஷயம்.” என்றார்.
அதேபோல் 1999 – 2000 ஆண்டில் நடந்தது போல் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் முத்தரப்பு டி20 அல்லது ஒருநாள் தொடரையும் நடத்த விரும்புகிறோம். ஆனால் ஐசிசியின் எதிர்காலப் பயணத்திட்டங்களில் முத்தரப்பு தொடர்களுக்கு இடமில்லை. எங்கள் ரசிகர்களுக்கு பிடித்தமானவற்றை செய்ய விரும்புகிறோம். உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்கவே விரும்பும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகி பீட்டர் ரோச்சும் ஆர்வம் கொப்புளிக்கக் கூறியுள்ளார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தொடர்ந்து முத்தரப்புத் தொடர்களுக்கான வாய்ப்பை ஐசிசியிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஐபிஎல் போன்ற பிற தனியார் லீகுகளினால் முத்தரப்பு தொடர்கள் இல்லாமலேயே போய்விட்டன. ஆஸ்திரேலியா தொடர் என்றாலே டெஸ்ட் தொடருடன் சேர்த்து நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர்களை காலங்காலையில் ரசிப்பதே ஒரு தனி ரசனைதான். தனியார் டி20 லீகுகள் கிரிக்கெட்டின் அழகியல் அம்சங்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்று தான் கூறவேண்டியிருக்கிறது.