ஆவின் பால் விலை உயர்கிறதா? விஜய் அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் மாநிலம் எங்கும் பால் கடைகளை நிறுவி பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் ஆவின் நிறுவனம் பால் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களின் விலைகளையும் உயர்த்தியது. இந்நிலையில் விரைவில் பால் விலையும் உயர போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆவின் நிறுவனம் தினமும், 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. இதில் ஆரஞ்சு நிற பால், அரை லிட்டர் 30 ரூபாய்க்கும், பச்சை மற்றும் ஊதா நிற பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும், ப்ளூ நிற பால் பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்நிலையில் பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தலாம் என ஆவின் நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை, 75 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து வருகின்றன. தனியாரை விட குறைந்த விலையில், ஆவின் பால் விற்கப்படுவதால், ஹோட்டல்கள், டீக்கடைகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் ஆவின் பால் தான் அதிகளவில் வாங்கப்படுகிறது. இந்நிலையில் பால் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்த, அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாக தினமலர் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.
ஆவின் பாலகங்கள் நடத்துவோருக்கு, ஒரு பாக்கெட் பாலுக்கு 75 காசுகள் மட்டுமே கமிஷனாக கிடைக்கிறதாம். மின்கட்டணம், கடை வாடகை உள்ளிட்டவற்றை ஈடுகட்ட கூட இந்த பணம் போதவில்லை என பலரும் கூறுகிறார்களாம். ஆவின் பால் குறைந்த விலையில் விற்கப்படுவதால், விவசாயிகள், ஆவின் நிர்வாகம், பாலகங்களை நடத்துவோர், சிரமத்திற்கு ஆளாகி வருவதாக சொல்லப்படுகிறது.
தற்போது, பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி விட்டது. இதனால், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். அத்துடன், ஆவின் நிர்வாகம் மற்றும் பாலகங்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் விலையை உயர்த்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
அதாவது லிட்டருக்கு நான்கு ரூபாய் ஆவினுக்கும், ஒரு ரூபாய் பாலகங்களுக்கும் கிடைக்கும் வகையில் பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம். அண்மையில் தான் கர்நாடகா அரசு லிட்டருக்கு எட்டு ரூபாய் வரை, பால் விலையை உயர்த்தியது. இதனை பின்பற்றி தமிழக அரசும் பால் விலையை உயர்த்த போகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே அரிசி , சர்க்கரை என பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படுகின்றனர், இந்த சூழலில் பால் விலையும் உயர்த்தப்பட்டால் மக்களின் மாதாந்திர பட்ஜெட்டிலேயே துண்டு விழுந்துவிடும்.

