ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு: தீபாவளி நெருங்கும் வேளையில் விலையை உயர்த்தியதால் அதிர்ச்சி..!!
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் பால் நிறுவனம் திடீரென தனது பால் பொருட்களின் விலைகளை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பில் பால் மட்டுமில்லாமல் தயிர், மில்க் ஷேப், பால்கோவா, ரசகுல்லா, பன்னீர், நெய் என பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், பாலில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்புகள், மோர் மற்றும் பிஸ்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும் முதல் விலை உயர்வு இது.

ஆவின் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மூலப்பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான ஏற்றம், பால் கொள்முதல் செலவுகள் மற்றும் இதர பராமரிப்பு செலவினங்கள் அதிகரித்துள்ளதால் பல்வேறு பொருட்களின் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
ஆவின் நிறுவனம் நெய், மில்க் ஷேக், மைசூர்பாக் உள்ளிட்ட 63 பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதன்படி,
100 கிராம் நெய் ரூ.85ல் இருந்து ரூ.95ஆக உயர்வு
100 கிராம் ரசகுல்லா ரூ.45ல் இருந்து ரூ.50ஆக உயர்வு
100 கிராம் வெண்ணெய் ரூ.60ல் இருந்து ரூ.70ஆக அதிகரிப்பு
கால் கிலோ குலோப்ஜாமுன் ரூ.100ல் இருந்து ரூ.115ஆக அதிகரிப்பு,
கால் கிலோ மைசூர்பாக் ரூ.140ல் இருந்து ரூ.160ஆக உயர்வு
200 மில்லி லிட்டர் லஸ்ஸி ரூ.20ல் இருந்து ரூ.23ஆக அதிகரிப்பு
500 மில்லி லிட்டர் நெய் ரூ.365ல் இருந்து ரூ.400 ஆக விலை உயர்வு
மில்க் ஷேக் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக அதிகரிப்பு
500 கிராம் தயிர் ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆக விலை உயர்வு
250 கிராம் ஆவின் மைசூர்பா ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆக விலை உயர்வு
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆவின் பால் பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சர்க்கரை , அரிசி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் கலக்கமடைந்துள்ள மக்கள் இந்த தீபாவளியை எப்படி கொண்டாடுவது என தெரியாமல் திணறி வருகின்றனர்.
இதில் பலகாரம் செய்ய பயன்படுத்தப்படும் நெய் மற்றும் தீபாவளிக்காக மக்கள் அதிகமாக வாங்கும் மைசூர் பாக்கு, ரசகுல்லா , குலோப்ஜாமுன் போன்ற இனிப்புகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு கவலையை தந்துள்ளது.அதே போல மக்கள் அடிக்கடி வாங்கும் தயிர், வெண்ணெய் போன்ற முக்கிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது இல்லத்தரசிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.

