சென்னை: ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை இன்று முதல் உயர்த்தப்படுகிறது. இது குறித்து ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‘ஐஸ்கிரீமில் சாக்கோ பார், பால் வெண்ணிலா, கிளாசிக் கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லேட் ஆகிய 4 வகையான ஐஸ்கிரீம்களின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்விவரம் வருமாறு: 65 எம்.எல். எடை கொண்ட சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. 100 எம்.எல். எடை கொண்ட கிளாசிக் கோன் வெண்ணிலை ரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும், 100 எம்.எல். எடைகொண்ட கிளாசிக் கோன் சாக்லேட் விலைரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின்ஐஸ்கிரீம் வகைகள் ரூ.2 முதல் ரூ.5 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மார்ச் 3-ம் தேதி (இன்று) முதல் அமல்படுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலம் நெருங்கும் நிலையில், ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வுக்கு தமிழக பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.