சிங்கப்பூர் அரசாங்க அதிகாரி போல நடித்து மோசடி செய்ய முயன்ற சம்பவத்தில், 44 வயதான மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை இன்று (ஆகஸ்ட் 31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில், UOB வங்கியிலிருந்து காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்தது. வங்கி கிளைக்குச் சென்றிருந்த அந்த ஆடவர், ரொக்கம் பெறுவதற்கான காசோலையுடன் வருகை தந்திருந்தார். அந்த காசோலையின் நம்பகத்தன்மையில் சந்தேகம் ஏற்பட்டதால், வங்கி உடனடியாக காவல்துறையினரை தொடர்புகொண்டது.
இதனைத் தொடர்ந்து, மோசடி ஒழிப்பு பிரிவு மற்றும் மத்திய காவல்துறை பிரிவு அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு, அந்த ஆடவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தி அன்றே அவரை கைது செய்தனர்.
விசாரணையில், 65 வயதான மூதாட்டி ஒருவரை இலக்கு வைத்து செயல்பட்ட வெளிநாட்டு மோசடிக் கும்பல் இந்தக் குற்றச்செயலுக்குப் பின்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த கும்பல், தங்களை சட்ட அமைச்சின் அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி, மூதாட்டியை சட்டவிரோத நிதி பரிவர்த்தனை தொடர்பான விசாரணை நடைபெறுகிறது என மிரட்டி, ஒரு ரொக்கக் காசோலையை அந்த ஆடவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை, அந்த ஆடவர் வெளிநாட்டு மோசடி கும்பலுக்காக செயல்பட்டதாக சந்தேகிக்கிறது. அவரிடமிருந்து ரொக்கக் காசோலை மற்றும் மலேசிய வங்கி ஏடிஎம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், அந்த ஆடவருக்கு நாளை (செப்டம்பர் 1) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




