சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது வழக்கம் போன்று இந்திய வீரர்களையே பெரிதும் நம்பி களமிறங்குகிறது. எனினும் இம்முறை ஆல்ரவுண்டர்கள் அதிகளவில் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக் ஆகியோர் தங்களது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்களாக திகழ்கின்றனர். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல், ஆடம் ஸாம்பா ஆகியோருடன் அணி வலுவாக உள்ளது. கடந்த சீசனில் யுவேந்திர சாஹல் 21 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஐபிஎல் வரலாற்றில் அவர், 187 விக்கெட்களை வேட்டையாடி டாப்பில் உள்ளார்.
இந்த சீசனுக்காக தேவ்தத் படிக்கலை டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானை வாங்கி உள்ளது. மேலும் பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த ரோவ்மன் பவல், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் கோஹ்லர்-காட்மோர் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். ரூ.5.80 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள நாக்பூரை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான ஷுபம் துபே மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க ஜேசன் ஹோல்டரை விடுவித்த பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தில் வலுவான ஆல்ரவுண்டரை எடுக்கவில்லை. இது இம்பாக்ட் பிளேயர் விதியில் அணிக்கு பாதகமான நிலையை உருவாக்கக்கூடும். இருப்பினும் சையது முஸ்டாக் அலி தொடரில் ஆல்ரவுண்டராக ஜொலித்த ரியான் பராக் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை செலுத்தக்கூடும். ரியான் பராக் அந்த தொடரில் மட்டை வீச்சில் 182.79 ஸ்டிரைக் ரேட்டுடன் 510 ரன்களையும், பந்து வீச்சில் 11 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.