Last Updated:
Bangalore Stampede | ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு காங்கிரஸ் தலைமை சம்மன் அளித்துள்ளது.
ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டக் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சீல் வைக்கப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கடந்த 4ஆம் தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கைத் தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் காமேஷ்வர் ராவ், ஜோஷி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த அரசுத் தரப்பு, 11 பேர் உயிரிழந்தது எப்படி என விசாரிக்க நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள் வரும் வியாழக்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கில் கைதான ஆர்சிபி நிர்வாகி நிகில் சோசலேவுக்கு இடைக்காலச் சலுகைகளை வழங்கவும் கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனிடையே 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு காங்கிரஸ் தலைமை சம்மன் அளித்துள்ளது.
June 10, 2025 5:42 PM IST


