சென்னை மற்றும் பெங்களூரு இடையே இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின்போது, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போட்டியை தீர்மானிக்கும் விதிகளை பார்க்கலாம்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெறவுள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு அடியெடுத்து வைக்கும் என்பதால், பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆர்சிபி – சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையங்களும், வானிலை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பெங்களூருவில் பகல் நேரத்தில் மழை பெய்வதற்கு 70% வாய்ப்பும், மாலை நேரத்திற்கு பிறகு 80% வாய்ப்பும் இருப்பதாக கூறியுள்ளனர். பெங்களூரில் இன்று கடும் மழை பெய்து, ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அவ்வாறு நடந்தாலே, சென்னை அணி 15 புள்ளிகளுடன் தானாக பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும். ஆர்சிபி – சிஎஸ்கே இடையிலான ஆட்டத்தில் மழை குறுக்கிட்டுப் பின்னர் ஆட்டம் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தால், என்ன ஆகும் என்பதுதான் இன்று போட்டியின் எதிர்பார்ப்பு.
ஐபிஎல் விதிப்படி, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் லீக் சுற்றுப் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால், அந்த போட்டியை நடத்த கூடுதலாக 60 நிமிடங்கள் வழங்கப்படும். இதுவே பிளே ஆஃப், எலிமினேட்டர் சுற்று என்றால் 120 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதாவது, இரவு 9.30 மணி வரை போட்டி நடத்த வாய்ப்பு நீட்டிக்கப்படும். லீக் சுற்றில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின் மழை தொடர்ந்தால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
இது லீக் சுற்றுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் மழை குறுக்கிட்டு போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால், மீதமிருக்கும் நேரத்தின்படி, எத்தனை ஓவர்கள் பந்து வீசுவது என்பது, ஒரு மணி நேரத்திற்கு 14.11 ஓவர்கள் அடிப்படையில் கணக்கிட்டு முடிவு செய்யப்படும். அவ்வாறு நடத்தப்படும் ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியான ஓவர்கள் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
அதற்கும் நேரம் இல்லாவிட்டால், குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வரை வீசப்பட்டு, முடிவை அறிந்து கொள்ளலாம். ஒரு வேளை முதலில் ஒரு அணி பேட்டிங் செய்த பின்னர் மழை பெய்தால், எவ்வளவு நேரம் மீதமிருக்கிறது என்பதைப் பொறுத்து டிஎல்எஸ் விதிப்படி ஓவர்களை முடிவு செய்ய வேண்டும். ஆனால், இதற்கு அதிகபட்ச நேரம் இரவு 12.06 மணி வரை மட்டுமே. அதற்குள் 5 ஓவர்கள் வீசும் அளவுக்காவது சூழல் மாறியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து மழை பெய்தால் போட்டி ரத்து செய்யப்படும்.
ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல, சென்னை அணியை வென்றால் மட்டும் போதாது. அந்த வெற்றி 18 ரன்கள் வித்தியாசம் அல்லது, 11 பந்துகளை மீதம் வைத்த வெற்றியாக இருக்க வேண்டும். (ஓவர் குறைந்தால் இந்த விதி மாறும்).
போட்டியால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெறும்போது, சென்னை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் சென்னை அணிக்கு சாதகமான அம்சங்கள் இந்த போட்டியில் உள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
