பெங்களூரு: கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பொது இடங்களில் பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும், அதன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவுக்கு மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் கர்நாடகாவின் ரெய்ச்சூர் மாவட்டம், லிங்சாகூரில் கடந்த 12-ம் தேதி நடந்த ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்ற சிர்வார் வட்டார மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமார் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பசவ கல்யாண் தாலுகாவில் அரசு மாணவர் விடுதி சமையலராகப் பணியாற்றிய பிரமோத் ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்று, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவரை வட்டாட்சியர் மஞ்சுநாத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அரசு ஊழியர்களின் விவரத்தை திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

