இதற்கு மாறாக, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் சொந்தத் தொழில் தொடங்கும் முயற்சி இளைஞர்களிடையே புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மக்களின் உடல் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்படும் தொழில்கள் அதிக கவனம் பெறுகின்றன.
அந்த வகையில், வேலைக்கு செல்லுவோர், காலை உணவை தவிர்ப்போர், மாணவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட பலரின் தேவையை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற இளைஞர், ‘ருத்ரன் ஃப்ரூட் பவுல்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். ‘ருத்ரன் ஃப்ரூட் பவுல்’ என்ற இந்த முயற்சியில், பல்வேறு பழங்களை நன்கு சுத்தம் செய்து நறுக்கி, ஒரே பேக்கேஜில் குறிப்பிட்ட அளவில் “ஆரோக்கியமான பழக் கிண்ணம்” என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு விற்பனை செய்து வருகிறார்.
இந்த முயற்சிக்கு அடிப்படையாக அவரது மனைவியின் கர்ப்ப கால அனுபவம் அமைந்ததாக கார்த்திகேயன் தெரிவிக்கிறார். இதனால் அந்த நாட்களில் ஆரோக்கிய உணவின் அவசியத்தை உணர்ந்த நிலையில், நண்பருடன் இணைந்து இந்த முயற்சியைத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார். தற்போது தனிப்பட்ட முறையில் இந்த தொழிலை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
‘ருத்ரன் ஃப்ரூட் பவுல்’ மூலம் ₹90 முதல் ₹135 வரை உள்ள பேக்கேஜ்களில் ஆப்பிள், திராட்சை, கொய்யா, மாதுளை, ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், மாம்பழம், வெள்ளரி, கேரட், பீட்ரூட், முளைகட்டிய பயறு உள்ளிட்ட பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன. அனைத்தும் நன்கு சுத்தம் செய்து, வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப தயாரித்து வீட்டுக்கே டெலிவரி செய்யப்படுகிறது. இதற்கு தேவையான பழங்களை அருகிலுள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதோடு, பழத் தோல்களை வீணாக்காமல் கசாயம், சுத்தம் செய்யும் திரவம் போன்ற பயன்பாடுகளுக்கும் மாற்றி வருகின்றனர்.
மாதம் ₹40,000 சம்பள வேலை செய்த அனுபவம் இருந்தாலும், முதல் வாடிக்கையாளர் எடுத்த ₹500 மதிப்புள்ள பேக்கேஜ் தான் தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்ததாக கார்த்திகேயன் கூறுகிறார். எதிர்காலத்தில் சிறிய கடை தொடங்குவதும், மேலும் பல ஆரோக்கிய உணவுகளை அறிமுகப்படுத்துவதும் அவரது திட்டமாக உள்ளது. “பெருநகரங்களில் மட்டுமல்ல… புதுக்கோட்டையிலும் ஆரோக்கிய உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக பூரிப்புடன் இளைஞர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
Jan 04, 2026 11:24 AM IST
ஆரோக்கியமே மூலதனம்!! பழங்களில் லாபம் – புதுக்கோட்டையில் ட்ரெண்டாகும் ஃப்ரூட் பவுல் தொழில்…

