Last Updated:
பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.
பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மருத்துவத்துறை என்பது அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமின்றி அது இரக்கம், நம்பிக்கையின் அடையாளம் என்று கூறினார்.
இதுகுறித்து, இந்திய அரசு பத்திரிக்கை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” இந்திய மத்திய அரசின் சுகாதார திட்டங்கள் குறித்து எடுத்துரைத்த அவர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பயனாளிகளின் சிகிச்சைக்காக இதுவரை ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தொலைதூரப் பகுதி மக்களுக்கும் உயர்தர சிகிச்சை சென்றடைய தொலைமருத்துவ வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு இளம் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மத்திய சுகாதார அமைச்சர் .ஜே.பி. நட்டா பேசிய போது, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 12 ஆண்டுகளில் 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 800-ஆகவும், இளங்கலை மருத்துவ இடங்கள் 1.42 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. 2029-க்குள் கூடுதலாக 75,000 மருத்துவ இடங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தற்போது பிலாஸ்பூர் எய்ம்ஸ் 776 படுக்கைகள், 41 சிறப்புப் பிரிவுகளுடன் விரிவடைந்துள்ளது. இவ்விழாவில் எம்பிபிஎஸ், செவிலியர் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 92 மாணவ, மாணவியருக்குப் பட்டங்களும், சிறப்பிடம் பெற்றவர்களுக்குத் தங்கப்பதக்கங்களும் வழங்கப்பட்டன. இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


