Last Updated:
பாஜக-வில் இணைந்தால் 15 கோடி ரூபாயும், அமைச்சர் பதவியும் தருவதாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு பாஜகவினர் அழைப்பு விடுத்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதன் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.
இந்த நிலையில், டெல்லி சட்டமன்ற தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், சில ஏஜென்சிகள் முறைகேடான கட்சி 55 இடங்களுக்கு மேல் பெறும் என்று கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடந்த இரண்டு மணி நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 16 பேருக்கு பாஜகவினர் தொலைபேசியில் அழைத்துப் பேசியிருப்பதாகவும், அவர்களிடம் பாஜகவில் இணைந்தால் தலா 15 கோடி ரூபாயும், அமைச்சர் பதவியும் தருவதாக பாஜகவினர் கூறியதாகவும் பதிவிட்டுள்ளார்.
பாஜக கட்சி 55 இடங்களுக்கு மேல் பெற்றால், தங்களது வேட்பாளர்களை அழைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கெஜ்ரிவால் வினவியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை ஆதரித்துள்ள டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான முகேஷ், தனக்கும் பாஜகவினர் அழைப்பு விடுத்ததாக ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
February 07, 2025 8:40 AM IST
”ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ரூ.15 கோடி, அமைச்சர் பதவி என விலை பேசுகிறார்கள்” – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு


