Last Updated:
Aam Aadmi Party | மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து கடந்த 2ஆம் தேதி ராகவ் சத்தா நீக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி தலைமை மீது அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி முகமாக அறியப்பட்ட ராகவ் சத்தா உள்ளிட்ட 3 எம்பிக்கள் பாஜகவில் இணைந்தது பெரும் பேசு பொருளாகியுள்ளது. பாஜகவில் இணைந்த ராகவ் சத்தா உள்ளிட்டோர் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாயுமா? அதில் இருந்து அவர்கள் தப்ப வழியுண்டா?
நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்த ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா திடீரென பாஜகவில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து கடந்த 2ஆம் தேதி ராகவ் சத்தா நீக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி தலைமை மீது அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக யாருக்கு எதிராக மாநிலங்களவையில் குரல் எழுப்பி வந்தாரோ, அதே பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் தலைமையில் ராகவ் சத்தா அக்கட்சியில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து ஆம் ஆத்மி மாநிலங்களவை துணைத் தலைவர் சோக் மிட்டல், சந்தீப் பதாக் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து பேசிய அவர், ஹர்பஜன் சிங், சுவாதி மலிவால், விக்ரம்ஜித் சிங் சஹானி, ராஜிந்தர் குப்தா ஆகிய எம்பிக்களும் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் 10ஆக உள்ள நிலையில், அதில் 7 பேர் பாஜகவுடன் கைகோர்ப்பதாக வெளியாகி உள்ள தகவல் அக்கட்சிக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் ராகவ் சத்தா உள்ளிட்டோர் மீது இந்திய அரசியலமைப்பின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநிலங்களவை தலைவரிடம் முறையிட உள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஒரு கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியில் இணைந்தால் அது கட்சித் தாவலாக கருதப்படாமல், கட்சி இணைப்பாகவே பார்க்கப்படும் என அரசியலமைப்பு கூறுகிறது. இதற்கு முன் மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பிய அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷின்டே ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்து கட்சியை உடைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ராகவ் சத்தா உள்ளிட்ட 7 பேர் பாஜகவுடன் கைகோர்ப்பது கட்சி இணைப்பாக கருதப்பட்டு அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை நீர்த்துப் போகச் செய்யும் எனக் கூறப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
ஆம் ஆத்மிக்கு ‘செக்’ வைத்த ராகவ் சத்தா… கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பப் போவது எப்படி? | Aam Aadmi


