Last Updated:
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்னையால் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் பாகிஸ்தான் தனது போர் விமானங்கள் மூலமாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இதை மறுத்துள்ள பாகிஸ்தான், பயங்கரவாத முகாம்கள் மீதே தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் காரணம் காட்டியிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரம்ஜான் மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதலை கண்டிப்பதாகக் கூறியுள்ளார். பாகிஸ்தான் தனது தோல்விகளை வெளிப்படுத்தும் மற்றொரு முயற்சி இது எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, ஒருமைப்பாடு, சுதந்திரம் ஆகியவற்றிற்கான தனது ஆதரவை இந்தியா வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


