Last Updated:
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்னையால் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் பாகிஸ்தான் தனது போர் விமானங்கள் மூலமாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், ஆப்கானிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் உள்ளிட்டவை மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 30-க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் அதற்கு ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் காரணம் காட்டியிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Feb 22, 2026 12:28 PM IST


