Last Updated:
கடந்த காலங்களில் சீன முதலீட்டாளர்களைக் குறிவைத்து ஐஎஸ் அமைப்பு தாக்குதல்களை நடத்தியுள்ளதால், அதன் மீதே சந்தேகம் வலுத்துள்ளது
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டவர்கள், குறிப்பாக சீன நாட்டவர்கள் தங்கும் பிரபல ஹோட்டல் மற்றும் உணவகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காபூலின் முக்கிய வணிகப் பகுதியான ஷார்-இ-நாவ் பகுதியில் உள்ள ‘லான்சோ பீஃப் நூடுல்ஸ்’ என்ற உணவகத்திற்கு அருகே இன்று பிற்பகல் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த உணவகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஹோட்டல் சீன தொழிலதிபர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகும். திடீரென நிகழ்ந்த இந்த வெடிவிபத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.
தற்போதைய தகவல்களின்படி, இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காகக் காபூலில் உள்ள அவசர சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீன அரசு ஊடகமான CCTV தகவல்படி, காயமடைந்தவர்களில் இரண்டு பேர் சீன குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பாதுகாப்பு அதிகாரி, நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர்.
தலிபான் அமைப்பின் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான், “பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தைச் சூழ்ந்துள்ளனர், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


