காஷ்மீர், பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் மீது இந்திய சில ராஜாங்க ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டது. அதேபோல், பாகிஸ்தானும் இந்தியா மீது ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்திய ராணுவம், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் மூலம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் ட்ரோன், சிறிய ரக ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது.
அவற்றை இந்திய ராணுவம் வானத்திலேயே தடுத்து நிறுத்தி அழித்தது. இரு நாட்டிற்கும் இடையே போர் பதற்றம் உருவான நிலையில், பின்னர் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தின.
இந்தச் சண்டை நிறுத்தத்தை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகத்தை வைத்து இந்தச் சண்டை நிறுத்தத்தை கொண்டுவந்ததாகவும், உலகிலேயே வர்த்தகத்தைக் கொண்டு போரை நிறுத்தியது தான் என்றும் பேசிவந்தார்.
இதற்கு இந்தியா தரப்பில் இருந்து தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. மேலும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே சண்டை நிறுத்தம் மேற்கொண்டதாகவும் விளக்கம் கொடுத்திருந்தது. ஆனாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தான், தான் இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக தெரிவித்துவந்தார்.
கடந்த ஜூன் மாதம் நடந்த ஜி7 மாநாடு முடிந்து தொலைப்பேசி வாயிலாக அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலே சண்டை கைவிடப்பட்டது” என தெரிவித்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பு நாடாளுமன்றம் கூடி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. மேலும், இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இருக்கிறதா என்றும், வர்த்தகத்தை காட்டி அமெரிக்கா இந்த சண்டையை நிறுத்தியதா என்றும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிவந்தன.
பின்னர் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 21ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடர் துவங்கிய 21ஆம் தேதி முதல் தொடர்ந்து அவையில் பிகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், நீதிபதி யஷ்வந்த் வர்மா உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இன்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனையடுத்து இன்று பிற்பகல் அமர்வில், ஆபரேஷன் சிந்தூர் குறித்தான விவாதத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் துவங்கி வைத்தார். அப்போது அவர், காத்துக் கொள்ளவே தாக்குதல் நடத்தினோமே தவிர அத்துமீறவில்லை என தெரிவித்தார். வரலாற்று சிறப்பு மிக்க தாக்குதல்களை மே 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானால் இந்தியாவில் ஓரிடத்தைக் கூட தாக்க முடியவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.
மேலும், இந்தியா – பாகிஸ்தான் மோதலை தாங்களே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவரும் நிலையில், நோக்கம் நிறைவேறியதால்தான் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தியதாக ராஜ்நாத் சிங் விளக்கியுள்ளார். புற அழுத்தம் எதுவும் வரவில்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், கடந்த ஒரு மாதமாக உளவுத்துறை காஷ்மீரில் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பின் பலனாக இன்று காலை காஷ்மீர், ஸ்ரீநகர் அருகே உள்ள தாச்சிகாம் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஆபரேஷன் மஹாதேவ் என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், இந்திய ராணுவமும், ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையினரும் இணைந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஹாஷிம் மூசா உள்ளிட்ட மூவர் இந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய வெளிநாட்டினர் என்பதை உயர் புலனாய்வு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் நாளை (ஜூலை 29) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அதேபோல், இரவு 7 மணிக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் பதிலளிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
July 28, 2025 6:58 PM IST