Last Updated:
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால், ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்படலாம். தரம்சாலா விமான நிலையம் மூடப்பட்டதால், மே 11ஆம் தேதி மும்பை அணியின் போட்டி மாற்றப்படலாம்.
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் சில ஐபிஎல் போட்டிகள் இடம் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத குழுக்களின் கட்டமைப்புகளை தகர்த்தது. இதில் தேடப்படும் தீவிரவாதியான மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் உட்பட பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பின் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, நடப்பு ஐபிஎல் தொடர் மே 25 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள வேளையில், இன்னும் 17 ஆட்டங்களே இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடர் மேற்கொண்டு திட்டமிட்டப்படி நடைபெறுமா? என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், தற்போதைய சூழ்நிலை, ஐபிஎல் அட்டவணை மற்றும் போட்டிகளில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும், திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் உள்ள தரம்சாலா விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், மே 11ஆம் தேதி அங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போட்டி இடமாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 8 ஆம் தேதி போட்டிக்காக தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிக்காக பஞ்சாப் மற்றும் டெல்லி அணி வீரர்கள் ஏற்கனவே அங்கு சென்றுவிட்ட நிலையில், மே 11ஆம் தேதி போட்டிக்காக மும்பை அணி அங்கு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே இந்த போட்டி மும்பை அல்லது வேறு மைதானத்திற்கு இடம் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


