Last Updated:
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா புதிய விதிகளை அறிவித்துள்ளது, இது டிஜிட்டல் பேங்கிங்கை பாதுகாப்பானதாக மாற்றும். வாடிக்கையாளர்கள் சேவைகளை தேர்வு செய்யலாம்.
டிஜிட்டல் பேங்கிங்கை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா புது விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய வழிகாட்டுதலில் வங்கிகள் வழங்கும் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் பிற ஆன்லைன் சேவைகள் போன்றவை அடங்கும். இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கஸ்டமர்களுக்கான தேர்வுகள்:
இந்த புதிய விதிகளின் கீழ், வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தெளிவான தேர்வுகளை வழங்க வேண்டும். அதாவது தங்களுடைய அக்கவுண்டுகளை முழுமையான டிரான்ஸாக்ஷன் சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டுமா அல்லது பார்ப்பது மட்டும் போதுமானதா (View only) என்பதை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் வகையில் விதி அமைக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்ட் போன்ற எளிமையான சேவையை பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் பேங்கிங் பயன்படுத்துவதற்கு வற்புறுத்தக் கூடாது.
ஒப்புதல் மற்றும் வெளிப்படைத்தன்மை:
எந்தவிதமான டிஜிட்டல் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு முன்பு அவர்களிடம் வங்கிகள் தகுந்த அனுமதியை பெற வேண்டும் என்று RBI குறிப்பிட்டுள்ளது. இதற்கான கட்டணங்கள் எவ்வளவு, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் யாரிடம் உதவி கேட்க வேண்டும் மற்றும் அது சம்பந்தமான எச்சரிக்கைகளை SMS அல்லது இமெயிலில் பெறுவது போன்ற அனைத்து விதமான தகவல்களையும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் இன்சூரன்ஸ் அல்லது முதலீட்டு திட்டங்கள் போன்ற தேர்ட் பார்ட்டி ப்ராடக்டுகளை வாங்கும் படி வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வற்புறுத்தக் கூடாது.
மோசடி சம்பந்தமான வலுவான சோதனைகள்:
ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்கு அனைத்து வங்கிகளும் சரியான மோசடி கண்டுபிடிப்பு கருவிகளை பயன்படுத்தி வழக்கத்திற்கு மாறான டிரான்ஸாக்ஷன்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் கஸ்டமர்கள் வழக்கமாக எப்படி அவர்களுடைய பணத்தை செலவு செய்வார்கள் என்பதை ஆய்வு செய்வதன் மூலமாக ஏதேனும் விசித்திரமான ஒரு செயல்பாடு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அது குறித்து வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். இந்த விதிகள் அனைத்தும் திங்கட்கிழமை அன்று RBIஆல் வெளியிடப்பட்டது.
வங்கிகள், நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இது குறித்து தங்களுடைய பரிந்துரைகளை ஆகஸ்ட் 11, 2025 வரை வழங்கலாம் என்பதையும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்தால் ஆன்லைன் பேங்கிங் சம்பந்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு மோசடிகள் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
உண்மையில் டிஜிட்டல் சேவைகளை உபயோகிக்க நினைக்கும் நபர்கள் மட்டுமே அதனை பயன்படுத்துவதற்கான சுதந்திரம் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. கட்டாயமாக டிஜிட்டல் பேங்கிங் பயன்படுத்தியாக வேண்டும் என்று யாரையும் இனி வற்புறுத்த முடியாது. இதன் மூலமாக வங்கி சேவைகள் அனைவருக்கும் எளிமையானதாகவும், நியாயமானதாகவும் வழங்கப்படும்.
July 29, 2025 10:55 AM IST