Last Updated:
ஆன்லைன் பணவிளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று இரண்டு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நாடாளுமன்றத்தில் இன்று, ஆன்லைனில் பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார். விளையாடுபவர்கள் பணம் கட்டும் வகையில் உள்ள ஆன்லைன் விளையாட்டுகளை இந்த மசோதா தடை செய்கிறது. அதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தினால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
அத்துடன் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தொடர்பான விளம்பரங்களுக்கும் இதன் மூலம் தடை விதிக்கப்படும். இதையும் மீறி விளம்பரம் செய்தால் 2 ஆண்டு சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மக்கள் பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில், 5 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை விதிக்கும் வகையிலான எந்தவொரு குற்றச்சாட்டின்கீழும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டு, 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31ஆவது நாளில் அவர்களை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது.
இதேபோல, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டால், அவர்களைக் குடியரசுத் தலைவர் பதவிநீக்கம் செய்யவும், அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படாவிட்டால், தானாகவே பதவி நீக்கம் செய்யப்படவும் வழிவகை செய்யப்படுகிறது.
August 20, 2025 4:00 PM IST


