பொதுவாக, வழக்கறிஞர் உதவியுடன் உயில் தயாரிப்பது என்பது அதிக செலவுகளை ஏற்படுத்துவதோடு, நீண்ட செயல்முறையாகவும் இருக்கும். ஆனால், இன்றைய டிஜிட்டல் உலகில், சரியான சட்ட ஆவணத்தை எளிதாகவும், விரைவாகவும் தயாரிக்க பல ஆன்லைன் தளங்கள் உதவுகின்றன.
தங்களுடைய சொத்துப் பங்கீடு குறித்து தெளிவான மற்றும் எளிமையான திட்டத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் உயில் எழுதுவது மிகவும் வசதியான மற்றும் செலவு குறைந்த தீர்வாகும். குறிப்பாக, வங்கி பேலன்ஸ், வீடு, நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களைத் தங்கள் உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுக்க விரும்புபவர்களுக்கு இந்த ஆன்லைன் முறை மிகவும் ஏற்றது.
ஆன்லைனில் உயில் எழுதும்போது தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்:
ஆன்லைனில் உயில் எழுதும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று, முதல் வரைவை உருவாக்கிய பிறகு அதை அப்படியே மறந்துவிடுவது. அவ்வாறு செய்வது முற்றிலும் தவறானது. நம்முடைய வாழ்க்கைச் சூழல்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். எனவே, குடும்பத்தில் ஏற்படும் நிதிநிலையில் ஏற்ற இறக்கங்கள், திருமணங்கள், விவாகரத்து, பிறப்பு மற்றும் இறப்பு போன்ற மாற்றங்களுக்கு ஏற்ப உயிலைத் தவறாமல் புதுப்பிப்பது மிகவும் அவசியம்.
உங்கள் உயிலில் சில சொத்துக்களைக் குறிப்பிடாமல் விட்டுவிடக் கூடாது. நீங்கள் பங்கீடு செய்ய விரும்பும் அனைத்து வங்கிக் கணக்குகள், அசையாச் சொத்துக்கள் (real estate), முதலீடுகள் (investments), தனிப்பட்ட உடமைகள் மற்றும் பிற மதிப்புமிக்க உடைமைகள் அனைத்தையும் பட்டியலிடுவது மிகவும் முக்கியம். எதையாவது விட்டுவிடுவது, பயன் பெறுவோர் இடையே சச்சரவுகளுக்கு வழிவகுக்கும். இதில் உங்கள் ஆன்லைன் கணக்குகள், சமூக ஊடகப் பக்கங்கள், கிரிப்டோ கரன்சிகள் மற்றும் உங்களுக்குச் சொந்தமான பிற டிஜிட்டல் சொத்துக்கள் (digital assets) உட்பட அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உயிலை இறுதி செய்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சரியான நிர்வாகியைத் தேர்ந்தெடுப்பது. ஏனெனில், உங்கள் உயிலில் உள்ள அறிவுறுத்தல்களை நிறைவேற்றும் பொறுப்பு அவருக்குத்தான் உள்ளது. தவறான நபரைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் சொத்துப் பங்கீட்டில் தாமதங்கள், சண்டைகள் மற்றும் தவறான நிர்வாகம் போன்றவை ஏற்படக்கூடும். உயில் எங்குள்ளது மற்றும் அதன் நிர்வாகி யார் என்பது உங்கள் அன்புக்குரியவர்களுக்குத் தெரிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உயில்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான சட்டதிட்டங்களை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். உங்கள் பகுதியில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் உயில் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், உங்கள் உயில் செல்லாததாகிவிடும். இது தேவையற்ற பின்விளைவுகளுக்கும் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.
உயில் எழுதியவர் அதில் கையொப்பமிட மறந்துவிடுவது ஒரு சாதாரணமான விஷயம் தான். ஆனால், இது பெரும்பாலானவர்கள் செய்யும் தவறாகும். உங்கள் அன்புக்குரியவர்களுக்குச் சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்கும் உயில், சட்டப்படி செல்லுபடியாகும் ஆவணமாக மாற உங்கள் கையொப்பம் கட்டாயமாக இருக்க வேண்டும். உங்கள் கையொப்பம் இல்லையென்றால், அந்த உயில் நீதிமன்றத்தில் செல்லாது. எனவே, உயிலை எழுதிய பிறகு மறக்காமல் அதில் கையொப்பமிடவும்.
August 05, 2025 5:34 PM IST

