ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டு நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி சர்ச்சையில் சிக்கியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனர்கள் நடிகர்கள் பாலியல் ரீதியாக தன்னை வன்கொடுமை செய்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
தெலுங்கில் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மட்டுமல்லாது தமிழிலும் பிரபல நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது எதிர்க்கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சித்து வந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகரும் ஜனசேனா கட்சி தலைவரும் ஆன பவன் கல்யாண், தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அனிதா உள்ளிட்டவர்கள் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து அநாகரீக பதிவுகளை போட்டு வந்தார். இந்த நிலையில் ஆந்திராவில் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகள் தூசி தட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிவாடா, அனகா பள்ளி, ராஜமுந்திரி பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து ஸ்ரீரெட்டி மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட இருக்கும் நிலையில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சந்திராபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டு ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “நான் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், நான் செய்த காரியத்தால் என் குடும்பத்தினரால் வெளியே செல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு திருமணம் ஆகாத நிலையில் போலீஸ் வழக்கு, கைது என்று மானத்தை வாங்காதே என்று குடும்பத்தினர் கெஞ்சுகிறார்கள். இனிமேல் உங்களை பற்றி அவதூறாக பேசமாட்டேன்’’ என்று வீடியோவில் நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்து இருக்கிறார்
.
&w=750&resize=750,375&ssl=1)
