Last Updated:
ஆந்திரத்தில் வரலட்சுமி பால் பண்ணை கலப்பட பால் விநியோகத்தில் 4 பேர் உயிரிழப்பு, 12 பேர் மருத்துவமனையில்; கணேஸ்வர ராவ் கைது, சந்திரபாபு நாயுடு இழப்பீடு அறிவிப்பு.
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஆந்திரப்பிரதேசத்தின் ராஜமுந்திரி அருகே நரசபுரம் கிராமத்தில் வரலட்சுமி பால் பண்ணை என்ற பெயரில் அங்கீகாரம் பெறாத பால் பண்ணையை அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பண்ணையின் மூலம் லாலா செருவு (Laala Cheruvu) மற்றும் சௌடேஸ்வரி நகர் மக்களுக்கு அன்றாடம் பால் விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கணேஸ்வர ராவ் விநியோகித்த பாலை குடித்த சில மணி நேரத்தில் பலருக்கு வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.
இதனைத் தொடர்ந்து, 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பால் வியாபாரி கணேஷ்வர ராவை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், 46 விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து 106 குடும்பங்களுக்கு விநியோகம் செய்ததாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில், களத்தில் இறங்கிய மாவட்ட நிர்வாகம், கலப்பட பாலை குடித்த 73 குடும்பங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. மேலும் 46 விவசாயிகளிடம் மாட்டிற்கு வழங்கப்பட்ட உணவு வகைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆனாலும் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் பாலில் யூரியா, டிடர்ஜென்ட் அல்லது ஃபார்மலின் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே பாலின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்யவும், புரதச் சத்து அதிகமாக இருப்பது போல் காட்டவும் யூரியா சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. பால் கறந்த பிறகு அதில் நுரை வருவதற்காகவும், தண்ணீரைச் சேர்த்தால் ஏற்படும் மாற்றத்தை மறைக்கவும் சோப்புத்தூள் கலக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பால் பல நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்க பிணங்கள் அழுகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளான ஃபார்மலின் கலக்கப்படுகிறது.
பல பால் வியாபாரிகள், பாலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து, பால் திரியாமல் இருக்க காஸ்டிக் சோடாவை சேர்க்கிறார்கள். பாலை வெண்மையாகக் காட்டவும், பாக்டீரியாக்களை அழிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடு கூட சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருட்கள் கலந்த பாலைக் குடிக்கும்போது ஏற்படும் பாதிப்புகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அதில் ஒன்று உடனடி பாதிப்பு, மற்றொன்று நீண்ட கால பாதிப்பு. ராஜமுந்திரி சம்பவத்தைப் போல, வீரியம்மிக்க வேதிப்பொருட்கள் இருந்தால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும்.
யூரியா மற்றும் காஸ்டிக் சோடா சிறுநீரக வடிகட்டிகளைச் சிதைத்து, சிறுநீர் வெளியேறுவதைத் தடுக்கும். கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, குடல் பகுதியில் புண்களை உண்டாக்கும். நச்சுக்கள் ரத்தத்தில் கலப்பதால் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும். சிறிது சிறிதாகக் கலப்படம் செய்யப்பட்ட பாலைத் தொடர்ந்து குடித்து வந்தால், நீண்ட கால பாதிப்பாக, புற்றுநோய் கூட ஏற்படலாம். குழந்தைகளுக்கு வளர்ச்சிக் குறைபாடு மற்றும் முன்கூட்டியே பருவமடைதல் போன்ற சிக்கல்கள் கூட உண்டாகும் என கூறப்படுகிறது.

