Last Updated:
டெஸ்லா கார் தொழிற்சாலையை ஆந்திராவுக்கு கொண்டு வர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா கார் தொழிற்சாலையை ஆந்திராவுக்கு கொண்டு வர அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், தனது டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் ஆட்சேர்ப்பதற்கான விளம்பரத்தையும் சமீபத்தில் டெஸ்லா வெளியிட்டது.
இந்நிலையில், மின்சார வாகன உற்பத்தியை ஆந்திராவில் தொடங்கும் வகையில் டெஸ்லா நிறுவனத்தை ஈர்க்க பல்வேறு சலுகைகள் மற்றும் நில வசதி கொடுக்க அம்மாநில பொருளாதார மேம்பாட்டு வாரியம் முன்வந்துள்ளது. முன்னதாக, அமெரிக்கா சென்ற ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், டெஸ்லா தலைமை நிதி அதிகாரி வைபவ் தனஜோவை சந்தித்துப் பேசி இருந்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மொத்த மின்சார வாகன விற்பனையில் 60 சதவீதம் தென் இந்தியாவில்தான் நடக்கிறது. இதனால், டெஸ்லா கார் தொழிற்சாலை தென்னிந்தியாவில் அமையவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் அமெரிக்க அதிபருடன் கலந்துகொண்ட எலான் மஸ்க், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்தால் 100% வரி விதிக்கப்படுவது நியாயமற்றது என குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதையும் படிக்க: இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பது ‘நியாயமற்றது’ – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து
கடந்த மார்ச் மாதம், புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்த இந்திய அரசாங்கம், கார் உற்பத்தியாளர்கள் 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால், இறக்குமதி வரி 15% ஆக குறைக்கப்படும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் டெஸ்லா இந்தியாவில் விரைவில் கால்பதிக்கும் என கூறப்படுகிறது.
February 23, 2025 9:57 AM IST
Tesla | ஆந்திராவில் டெஸ்லா கார் தொழிற்சாலை? சத்தமில்லாமல் காய் நகர்த்தும் சந்திரபாபு நாயுடு..!


