பண ஆதாயம், சதி அல்லது ஊழல் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சிபிஐ கண்டுபிடிக்கவில்லை என்றும் ஏதேனும் புதிய ஆதாரங்கள் கிடைத்தால், இந்த வழக்கை மேலும் விசாரிக்க சிபிஐக்கு சுதந்திரம் இருக்கும் என்றும் கூறிய நீதிபதி, சிபிஐ-யின் இறுதி அறிக்கையை ஏற்று வழக்கை முடித்துவைத்தார்.
மேலும், ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு வெறும் சந்தேகம் மட்டும் போதாது; குறைந்தபட்சம் ஆதாரம் வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது பாஜக பொய்யான வழக்குகளை சுமத்துவதாகவும் இந்த கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளால் ஏற்படும் மன உளைச்சலுக்கு யார் இழப்பீடு வழங்குவார்கள்? என்றும் ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், “எங்கள் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. இதேபோன்று காலப்போக்கில் எல்லா வழக்குகளிலும் உண்மை வெளிப்படும். எங்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பினார்கள்.
இந்த பொய்யான வழக்குகளைப் பதிவு செய்த அனைவரையும் இந்தப் பொய்யான வழக்குகளை போடச் செய்த தலைவர்களையும் சிறைக்கு அனுப்ப வேண்டாமா?
இரவும் பகலும் எங்கள் மீது சேற்றை வீசினார்கள். எங்கள் குடும்பங்கள் எவ்வளவு வேதனையைத் தாங்க வேண்டியிருந்தது?அதற்கெல்லாம் இழப்பீடு என்ன?
அவர்கள் எங்கள் மீது போலியான வழக்குகளைப் பதிவு செய்தார்கள். எங்களை சிறைக்கு அனுப்பினார்கள், இப்போது வழக்கை முடித்துவைக்கிறார்கள்.. இதுதான் நீதியா?” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பலரும் விசாரணை அமைப்புகளையும் பாஜக அரசையும் கடுமையாக சாடி வருகின்றனர்.

