Last Updated:
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம், டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் மசூத் பெசெஷ்கியன், முகமது பாகர் காலிபாப் தலைமையில் அரசு ஆதரவு பேரணிகள்.
ஈரானில் ஒரு புறம், அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசு ஆதரவான பேரணிகளும் தொடங்கியுள்ளன.
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த எதிர்ப்புகளை எதிர்கொள்ளவும், நாட்டு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதை காட்டவும் ஈரான் அரசு நேற்று நாடு தழுவிய அளவில் மாபெரும் அரசு ஆதரவு பேரணிகளை நடத்தியது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
மேலும் கெர்மான், ஜாகேதான் போன்ற 13-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களிலும் அரசு ஆதரவு பேரணிகள் நடைபெற்றன. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் டெஹ்ரானில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார். சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் பேரணியின்போது உரையாற்றினார்.
பேரணியில் பங்கேற்றவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உள்நாட்டில் நடக்கும் கலவரங்களுக்கு அந்நிய சக்திகளே காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இந்தப் பேரணிகள் ஈரானின் உள்விவகாரங்களில் தலையிட நினைக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு “எச்சரிக்கை” என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குறிப்பிட்டுள்ளார்.


