Last Updated:
மம்தா ஆதரவளித்த காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான், 19 வருட பழைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மே 3 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் தொகுதி இடைதேர்தல் காங்கிரஸ் வேட்பாளரை வரும் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நந்திகிராம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், மிலன் பிரதான் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. அவருக்கு ஆதரவளிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
அதற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே 19 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இடைத்தேர்தல் பரப்புரை 4-ஆம் தேதி முடிவடைய இருக்கும் சூழலில், மிலன் பிரதான் தேர்தல் பரப்புரை செய்வதற்கு குறைந்த அவகாசமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரெஜிநகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதாகக் கூறிய மம்தா அணி வேட்பாளர் ரபியுல் ஆலம் சௌத்ரி மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படுவதால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ரபியுல் ஆலம் சௌத்ரி அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே தேர்தலில் போட்டியிடுவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.


