ஹரியானா மாநிலம், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் ஷீதல். இவர் மாடலாக இருந்துவந்தார். கடந்த 14ஆம் தேதி இவரைக் காணவில்லை என அவரது சகோதரி பானிபட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை பெற்ற பானிபட் காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்துவந்தனர்.
காவல்நிலையத்தில் அளித்த புகாரில் ஷீதலின் சகோதரி, தனது சகோதரி 14ஆம் தேதி அஹர் கிராமத்தில் ஒரு படப்பிடிப்பிற்காகச் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்தார். இதன் அடிப்படையில், காவல்துறையினர், அஹர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக அவரை தேடினர்.
இந்தத் தேடலில், நேற்று நள்ளிரவு வேளையில், சோனிபட் பகுதியில், கந்தா கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்ததைக் கண்டறிந்தனர். உடனடியாக கால்வாயிலிருந்து காரை மீட்டனர். அப்போது அந்தக் காரில், ஒரு இளைஞர் படுகாயங்களுடன் இருந்துள்ளார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து காரை மீட்ட காவல்துறையினர் அதில், பெண் ஒருவர் கழுத்தில் அறுக்கப்பட்டு சடலமாக இருந்ததைக் கண்டறிந்தனர். பின்னர் அந்த பெண் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அந்த சடலம் குறித்து விசாரித்தபோது, அது கடந்த 14ஆம் தேதி காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மாடல் ஷீதலின் உடல் என்பது தெரியவந்தது. மேலும், அவரது உடலில் இருந்த காயங்கள் மற்றும் கழுத்து அறுக்கப்பட்டிருப்பதன் மூலம் இது கொலையாக இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது. இதனால், காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், காரில் இருந்தவரின் பெயர் சுனில் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஷீதலின் ஆண் நண்பர் என்றும் காவல்துறை தரப்பில் தகவல் சொல்லப்படுகிறது. பானிபட் பகுதியைச் சேர்ந்த மாடலின் உடல் சோனிபட் பகுதியில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ள வழக்கில் இரு பகுதி காவல்துறையினரும் இணைந்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
இதுவரை இந்த வழக்கில் காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை. தொடர்ந்து, இது தொடர்பாக விசாரித்துவரும் காவல்துறையினர் விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்யும் எனச் சொல்லப்பட்டுள்ளது. மேலும், விசாரணையின் முடிவிலேயே யார் மாடல் ஷீதலை கொலை செய்தது, எதற்காகக் கொலை நடந்தது, கார் எப்படி கால்வாயில் கவிழ்ந்தது உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.
June 16, 2025 6:50 PM IST

