Last Updated:
கடந்த 27 ஆம் தேதி ஜூனா கஞ்ச் (Juna Ganj) என்ற இடத்தில் ஆஞ்சலின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 5 பேர் சக்ஷமை சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்துடன் காதலி திருமணம் செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.
நாந்தெட் (Nanded) மாவட்டத்தை சேர்ந்த சக்ஷம்(Saksham), அதே பகுதியை சேர்ந்த ஆஞ்சல் (Aanchal) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆஞ்சலின் சகோதரர் ஹிமேஷும், சக்ஷமும் நண்பர்கள் ஆவர். இருவர் மீதும் குற்றவழக்குகள் உள்ளன.
இதனிடையே, ஆஞ்சலும், சக்ஷமும் காதலித்து வந்தது அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இருவரும் மாற்றுச் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஆஞ்சலின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 27 ஆம் தேதி ஜூனா கஞ்ச் (Juna Ganj) என்ற இடத்தில் ஆஞ்சலின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 5 பேர் சக்ஷமை சுட்டுக் கொன்றதாக தெரிகிறது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் தந்தை ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், சக்ஷமின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஆஞ்சலின், தனது உடலில் மஞ்சள், நெற்றியில் செந்தூரம் பூசி சடலத்தை திருமணம் செய்து கொண்டார். “அவர் இறந்த பிறகும், நான் அவருடையவராகவே இருப்பேன்,” என்று ஆஞ்சலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். தனக்கு நீதி வேண்டும் என்றும் குற்றச்செயலில் ஈடுபட்ட தனது குடும்பத்தினருக்கு மரணதண்டனை வழங்க வேண்டுமெனவும் ஆஞ்சலின் வலியுறுத்தினார். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
December 01, 2025 1:15 PM IST
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்தை திருமணம் செய்த இளம்பெண்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு சம்பவம்


