Last Updated:
கோவா மாநில காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. லாவூ மம்லேதர், ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தார்.
கோவா மாநில காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லாவூ மம்லேதர் (68), கர்நாடக மாநிலம் பெலகாவிக்கு ஒரு வேலை நிமித்தமாக சென்றிருந்தார். அங்கு வழக்கமாக தான் தங்கும் பெலகாவி காதே பஜாரில் உள்ள ஹோட்டல் ஸ்ரீனிவாஸ் ரெசிடென்சியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில் மதியம் 1.30 மணியளவில் அவர் தனது காரில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காதே பஜார் அருகே எதிரே வந்த ஆட்டோ மீது உரசிக் கொண்டு சென்றதாகத் தெரிகிறது. இதை உணராமல் அவர் ஹோட்டல் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநரான முஜாஹித் ஷகில் ஜமாதர் காரை துரத்திக் கொண்டு சென்றார்.
ஹோட்டல் அருகே காரை மடக்கிய அவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை காரிலிருந்து இறக்கிவிட்டு கடும் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த லாவூ, ஆட்டோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் தலைக்கேறிய ஆட்டோ ஓட்டுநர், முன்னாள் எம்.எல்.ஏ. மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுக்க முயன்றும் மாறி மாறி அவரது கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினார். அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் பலரும் ஆட்டோ ஓட்டுநரை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹோட்டல் படிக்கட்டுகளில் ஏறி உள்ளே சென்றார் மம்லேதர். அப்போது அவர் திடீரென ஹோட்டல் வளாகத்தில் சரிந்து விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெலகாவி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் எக்கோ கார்டியோகிராம் மற்றும் பிற பரிசோதனைகளை நடத்தினர். ஆனால் அவர் இறந்து விட்டதாக பின்னர் அறிவித்தனர். இதையடுத்து போலீசார் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மார்க்கெட் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஜமாதர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்பட்ட தகராறில் கோவா முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
February 16, 2025 10:11 PM IST


