Last Updated:
குற்றவாளி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டனர்
ஆடையை கழற்றுவது பாலியல் வன்கொடுமை முயற்சிதான் என்று சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து உச்சநீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. முன்னதாக, சிறுமியைத் தகாத முறையில் தொடுவதும், ஆடையை கீழே இறக்குவதும் பாலியல் வன்கொடுமைக்கான ஆயத்தமே தவிர, அது வன்கொடுமை முயற்சி அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பு குற்றவாளிக்கான தண்டனையைக் குறைக்கும் வகையில் இருந்ததால், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா உள்ளிட்டோரால் விமர்சிக்கப்பட்டது.
அதாவது கடந்த ஆண்டு, சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்த நபர் மீதான போக்சோ வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது. அதில், “ஒரு சிறுமியைத் தகாத முறையில் தொடுவதும், அவரது பைஜாமாவை அதாவது ஆடையை கீழே இறக்குவதும் பாலியல் வன்கொடுமைக்கான ஆயத்தம் மட்டுமே; அது வன்கொடுமை முயற்சி அல்ல” என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பினால் குற்றவாளிக்குத் தண்டனை குறையும் சூழல் ஏற்பட்டது, இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், ஒரு சிறுமியின் பைஜாமாவைக் கழற்றுவது என்பது பாலியல் வன்கொடுமை முயற்சியே என்று உறுதி செய்த நீதிபதிகள், குற்றவாளி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டனர். நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும்போது வெறும் சட்ட விதிகளை மட்டும் பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்கள் மீதான மனிதாபிமானத்தோடும் உணர்வுப்பூர்வமாகவும் செயல்பட வேண்டும் என்று இந்த அமர்வு வலியுறுத்தியது.
‘ஆடையை கழற்றுவது பாலியல் வன்கொடுமை முயற்சிதான்’ – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு.. விபரம் என்ன?


