ஆடி அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பை தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை நீர் பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரி மலையிலிருந்து கங்கை புனித நீரை எடுத்து அதை சுத்திகரிப்பு செய்து நாடு முழுவதும் கொண்டு சென்று சேர்க்கும் வேலையை இந்திய தபால் துறை செய்து வருகிறது. புது வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த கங்கா ஜல் எனப்படும் புனித நீரை பலரும் வாங்கிச் செல்கின்றனர்.
கங்கா ஜல் என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 395 தபால் நிலையங்களில் இந்த புனித நீரானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து பிற நாட்களில் கங்கா ஜல் விற்பனை செய்யப்படுகிறது. 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட இந்த பாட்டில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ஏசி ரூம் எல்லாம் தேவையில்ல… படுத்த உடன் தூக்கம் வர பாரம்பரியத்தை நாடும் மக்கள்…
தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கங்கா ஜல் புனித நீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழா காலங்களில் பலரும் ஆர்வமுடன் வந்துவாங்கிச் செல்வதாக திருநெல்வேலி தபால்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கங்கைக்கு நேரில் சென்று, புனித நீராட முடியாதவர்களுக்கு இந்த திட்டம் ஒரு மாற்றாக கருதப்படும் நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில்கள் தலைமை தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பை ஆகிய தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை நீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு அஞ்சல் துறையின் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களில் இதுகுறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம் என திருநெல்வேலி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்ட தலைமை தபால் நிலையங்களிலும் கங்கை நீர் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.