Last Updated:
ஆடிப்பெருக்கையொட்டி சேலத்தில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வீரகனூர், மேச்சேரி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தை வாரத்தில் சனி மற்றும் புதன், வெள்ளி போன்ற நாட்களில் நடைபெற்று வருகின்றது.
பெரும்பாலும் திருவிழா காலங்களில் இங்கு விற்பனை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும். அதுபோல தற்போது, ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் உள்ள வீரகனூரில் நடைபெற்ற கால்நடை சந்தையில் ரூபாய் 1.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்த வார சந்தைக்கு வீரகனூர், தலைவாசல், ஆறகழூர், தேவியாக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீரகனூர் ஆட்டுச் சந்தைக்கு, சேலம் மாவட்டம் மட்டுமின்றி பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் மேச்சேரி இன ஆடுகள் போன்ற பல்வேறு இன ஆடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன.
Salem,Tamil Nadu
August 03, 2025 11:12 AM IST


