அம்பாறை, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் பயிற்சி பெறும் ஆசிரியர் மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காண்பித்து, நீண்டகாலமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் சனிக்கிழமை (03) மாலை குறித்த விரிவுரையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விரிவுரையாளர், மாணவிகளின் பாடங்களுக்கான மதிப்பெண்களை வழங்கும் பொறுப்பிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தாம் எதிர்கொண்டதாகக் கூறப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்தால் தங்களுக்கான மதிப்பெண்கள் குறைக்கப்படலாம் என்ற அச்சத்தில், மாணவிகள் நீண்டகாலமாக இது தொடர்பில் முறைப்பாடு செய்யாமல் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஆசிரியர் பயிற்சி மாணவிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அதன் பின்னர், அம்பாறை பிரிவு மகளிர் பணியக அதிகாரிகள், சந்தேகநபரான விரிவுரையாளரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

