Last Updated:
மற்றொரு அரையிறுதியில் இலங்கை அணி பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ன் இன்று நடைபெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான இந்திய அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் என்ற வலுவான இலக்கைக் குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி, தனது 118-வது சர்வதேச டி20 போட்டியில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். ,அவர் வெறும் 49 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் சதம் அடித்த 4-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா 37 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 40 ரன்களும் எடுத்து ஷஃபாலிக்கு உறுதுணையாகச் செயல்பட்டனர். இப்போட்டியின் மூலம் ஸ்மிருதி மந்தனா, நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் (4,758 ரன்கள்) சாதனையை முறியடித்து, சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் புதிய சாதனை படைத்தார். ஷஃபாலி மற்றும் ஹர்மன்பிரீத் இணை 3-வது விக்கெட்டுக்கு வெறும் 55 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய வங்கதேச அணி, இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 15.4 ஓவர்களில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. வங்கதேச தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் திலாரா அக்டர் மட்டுமே அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர் நந்தனி சர்மா 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
வங்கதேசத்திற்கு எதிராக ரன்கள் அடிப்படையில் இந்தியா பெற்ற இரண்டாவது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் தங்கம் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் இலங்கை அணி பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


