Last Updated:
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்களை வென்றது. ஹிமான்ஷு தில்லான் வெள்ளி, ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கலம், சுசிகா தரியல் வெண்கலம் வென்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று இந்திய அணி 4 பதக்கங்களை வென்றது.
20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீரர்கள் ஹிமான்ஷு தில்லான் மற்றும் ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான் மொத்தம் 252 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ருத்ராங்க்ஷ் பாட்டீல் 230 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார். 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் போட்டியிலும் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
இதேபோல மல்யுத்தம், குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளை உள்ளடக்கி ஆசிய விளையாட்டுப் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Mixed Martial Arts போட்டியில் இந்திய வீராங்கனை சுசிகா தரியல் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்ற 200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் ரிலே நீச்சல் போட்டியில், இந்திய அணி நூல் இழையில் இறுதி வாய்ப்பை இழந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா இதுவரை 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.


