மும்பை: ஆசிய கோப்பை விவகாரம் குறித்து வரும் நவம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் விவாதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சூழலில் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற இந்திய அணி மறுத்துவிட்டது. இந்த சூழலில் கோப்பையை வழங்காமல் கையோடு கொண்டு சென்றார் நக்வி.
இது சர்ச்சையான சூழலில் ஆசிய கோப்பையை இந்திய அணியின் வசம் வழங்க வேண்டுமென ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் மூலம் கடந்த 22-ம் தேதி வலியுறுத்தியது பிசிசிஐ. இந்நிலையில், நவம்பர் 4-ம் தேதி ஐசிசி கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியின் வசம் கோப்பை வழங்கப்படாத விவகாரத்தில் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். இந்த தொடர் முடிந்து ஒரு மாத காலம் ஆகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதி இருந்தோம். அவர்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பது தெரிகிறது.
ஆசிய கோப்பை இன்னும் அவர்கள் வசம்தான் உள்ளது. அது அடுத்த சில நாட்களில் எங்கள் வசம் வரும் என நம்புகிறோம். ஒருவேளை கோப்பை எங்கள் கைகளுக்கு கிடைக்கவில்லை என்றால் துபாயில் நவ.4-ல் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் கவனம் பெற செய்யும் வகையில் செயல்படுவோம்” என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

