Last Updated:
ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான விளம்பர கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடிய போட்டியை நேரலை செய்யும்போது விளம்பர கட்டணமாக 10 வினாடிக்கு 16 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், யூஏஇ-யில், அடுத்த மாதம் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடக்கூடிய போட்டி சார்ஜா மைதானத்தில் 14ஆம் தேதி களைகட்டவுள்ளது. இந்த போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பு செய்யும் உரிமம் சோனி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பர கட்டண பட்டியலில், தொலைக்காட்சியில் போட்டியின்போது இடையில் விளம்பரம் செய்ய 10 வினாடிக்கு 14 லட்சம் முதல் 16 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சோனி நிறுவனத்துடன் இணைந்து போட்டியை வழங்கும் நிறுவனத்தின் விளம்பரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய 18 கோடியாகவும், இணையதளத்தில் ஒளிபரப்பு செய்ய 30 கோடியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடக் கூடிய போட்டியை இணையதளத்தில் 10 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுரசிப்பார்கள் என்பதால், இதற்கான விளம்பர கட்டணம் தொலைக்காட்சியை விட இரு மடங்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
August 18, 2025 3:05 PM IST


